Print this page

மின் கட்டணத்தை மேலும் குறைக்க பரிந்துரை

November 06, 2024

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

இதன் விளைவாக, இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை 4 முதல் 11 வீதத்திற்கு இடையில் குறைக்க முன்வந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் பெற்ற இலாபத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சார சபையினால் குறைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண வீதம் போதுமானதாக இல்லை என சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், புதிய பிரேரணையை சமர்ப்பித்த பின்னர் பதில் அளிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.