Print this page

பண்டிகை காலத்தில் அரிசி தட்டுப்பாடு

December 01, 2024

அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள அரிசி இருப்புக்கள் கிடைக்கப்பெறும் போது நத்தார் பண்டிகை முடிந்துவிடும் என உணவு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கு இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கினால் இரண்டு வாரங்களுக்குள் அரிசி இருப்புக்களை இலங்கைக்கு கொண்டு வர முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அரிசி சந்தையில் கடும் அரிசி தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது. அரிசி நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து 70,000 மெட்ரிக் டன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டு இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த அரிசி கையிருப்பு தொடர்பான மாதிரிகள் இலங்கைக்கு வருவதற்கு சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.

இந்நிலைமையின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசி கையிருப்பு டிசம்பர் மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பண்டிகைக் காலங்களில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்போதும் கடைகளில் இருந்து வரும் நாட்டு அரிசி 3 முதல் 5 கிலோ வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.