Print this page

மேலும் ஒரு கலாநிதி பிரச்சினைக்கு தீர்வு

December 14, 2024

பாராளுமன்ற இணையத்தளத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் தரவுகளை மீள ஆராய்ந்து அவற்றைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் அறிக்கையொன்றை வௌியிட்டு பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறு காரணமாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தவறு தற்போது நிவர்த்திக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.