தற்காலிக, வெளிப்படைத்தன்மையற்ற வரி விலக்குகளை வழங்குவதை நிறுத்துமாறு, இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இணைய வழி செய்தியாளர் சந்திப்பொன்றில் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழு தலைவர், இவான் பாபஜோர்ஜியோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கை, அரசாங்க வருமானத்தைக் குறைத்து, ஊழல் அபாயத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள அவர், மறுசீரமைப்புகள் தேவையெனவும், வரி விலக்கு தொடர்பான சரியான அளவுகோல்கள் அமைக்கப்படும் வரை, முத்திரை வரி மற்றும் துறைமுக நகர சட்டங்களின் கீழ், இலங்கை, புதிய வரிச் சலுகைகளை வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதத்திற்குள் இந்த சட்டங்களில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. வரி விலக்குகள் தெளிவானதாகவும், நியாயமானதாகவும், காலப்போக்கில் வரையறுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் .
அவை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான முக்கியமான வழியல்ல. நாட்டின் நிதி நிலைத்தன்மையைச் சரிசெய்வதற்கு, நிலையான கொள்கைகள் மற்றும் வருவாய் திரட்டல்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழு தலைவர் இவான் பாபஜோர்ஜியோ மேலும் தெரிவித்துள்ளார்.