Print this page

STF துப்பாக்கிச் சூட்டில் முக்கிய சந்தேகநபர் கொலை

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18ஆம் திகதி 11.00 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சுட்டில் கொல்லப்பட்டார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில், கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதற்கு பதிலடியாக, விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயமடைந்து உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த சந்தேகநபரின் உடல் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.