பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நள்ளரவு கடந்து 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 21 வயதான ‘சொப்சி மல்லி’ என அழைக்கப்படும் ஷெஹான் துலான் பெரேரா எனும் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 28 வயதான குறித்த நபரும் முச்சக்கர வண்டி சாரதி என்பதோடு, அவரது கைவிரல்கள் இரண்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணமடைந்த இளைஞன் உள்ளிட்ட 9 பேர் பொரலஸ்கமுவ பரலெஸ் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு மாலனி புளத்சிங்கள வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியில் வந்த இருவர் இவ்வாறு குறித்த நபரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இத்துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களை புரியும் போதைப்பொருள் சந்தேகநபரான, தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள ‘படோவிட்ட அசங்க’ என்பவருக்கு நெருக்கமான ஹர்ஷ கொட்டா என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையே இவ்வாறு நேற்று மீண்டும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டி சாரதியான மரணமடைந்த இளைஞர் எவ்வித குற்றச் செயல்களுடனும் தொடர்புட்டவர் அல்ல எனவும், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ‘கொஸ் மல்லி’ என்பவரின் உறவினருடன் நெருக்கமானவரின் மகன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்த கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிசார், பல முறை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகல் மங்கள தெஹிதெனியவின் மேற்பார்வையின் கீழ், பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.