Print this page

ரணிலை உடனே விடுதலை செய்ய வேண்டும்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தனது X தளத்தில் பதிவொன்றை வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த பதிவில், “ நான் இலங்கையிலும் தென் ஆசியாவிலும், உலகம் முழுவதும் உள்ள தலைவர்களுடன் இணைந்து, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு கோருகிறேன்.

2022ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார, அரசியல் ரீதியாக மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கியபோது நாட்டை காப்பாற்ற முன்வந்தவர் ரணில் தான். 

ரணில் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எந்த அடிப்படையும் அற்றவையாகும். அவை உண்மையெனக் கூட கருதினாலும், ஐரோப்பாவில் அவை குற்றமாகவும் கூடாது, ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையாகவும் கருதப்படாது.

இலங்கை அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிக்கு நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால், தயவு செய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.