Print this page

சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை - எச்சரிக்கும் அமைச்சர்

இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி சட்ட அமுலாக்க நிறுவனங்களின் சுதந்திரத்தை நிறுவியுள்ளது என்று மேலும் தெரிவித்தார். 

அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குழு கைது செய்யப்பட்டதாகவும், இது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இந்தோனேசிய பொலிஸார் நடத்திய 7 நாள் கூட்டு நடவடிக்கையின் விளைவாகும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்தார். 

குறித்த நடவடிக்கைக்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளதுடன், அதற்கேற்ப திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், முடங்கிப் போயிருந்த புலனாய்வு அமைப்பின் சில பகுதிகள் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். 

பல சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் கும்பல் வளர்ந்துள்ளதாகவும், தங்களின் இருப்பு மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் என்றவகையில் அவை அனைத்தையும் நிறுத்தியுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை உருவாக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவுகள் குறித்து தற்போது உன்னிப்பாக விசாரித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அத்தகைய நபர்களின் சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அது குறித்து அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார். 

Last modified on Thursday, 28 August 2025 11:57