இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடம் நடத்தப்படும் விசாரணைகளில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மித்தெனிய – கண்டேவத்தை பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்டமையும், மித்தெனிய – தொரகொலயாய பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் தங்களுக்குத் தெரிந்தே நடத்தப்பட்டதாக இவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
பாதாளக் குழுக்களின் தலைவர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் உள்ளிட்டோர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விசாரணைகளில் இவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது, விசாரணைக்குட்பட்டுள்ள ஐந்து பேரில் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர், மித்தெனிய மற்றும் எம்பிலிபிட்டியவிற்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களிடம், மேல் வடக்கு புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் தகவல்களின் பிரகாரம், ஒரு குழுவினரின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர். எனினும், அந்த வீட்டிலிருந்தோர் ஏற்கனவே அங்கிருந்து வௌியேறியிருந்தமையும், தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தமையும் பொலிஸாருக்கு தெரிய வந்தது.
கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 28 கையடக்க தொலைபேசிகளிலுள்ள விபரங்களையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
பாதாளக் குழுவினரிடம் தொடர்பிலிருந்த சகலரையும் கண்டறிவதற்கு இவர்களின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் சோதனை செய்யப்படவுள்ளன.