Print this page

ரத்தன தேரர் பிணையில் விடுதலை

September 12, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா ரூ. 500,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் ரூ. 10,000 ரொக்கப் பிணையிலும், வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ‘அபே ஜன பல’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்றஆசனத்தைப் பெறுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அவரது கையொப்பம் பலவந்தமாகப் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து, கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் (CCD) கோரிக்கையை அடுத்து, 2025 ஓகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் ரத்தன தேரர் மீது பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் ஓகஸ்ட் 29ஆம் திகதி நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான அத்துரலியே ரத்தன தேரர், கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.