Print this page

ஹர்ஷவுக்கு பதிலடி கொடுத்த நந்தலால்

November 06, 2025

பொருளாதாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். 

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா: 

"மத்திய வங்கியின் ஆளுநரே, பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நிதி கொள்கை குறித்து, உதாரணமாக, பணவீக்கம் அல்லது அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து கேள்வி எழுப்பினால், பொதுவாகப் பதில் கிடைப்பதில்லை, ஏன் என்றால் பாராளுமன்றத்தில் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் இல்லை." என'றார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க: 

"ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு கேள்வியை எழுப்பினால், அது நேரடியாக நிதி அமைச்சருக்கே அனுப்பப்படுகிறது. பின்னர் அவர்கள் சில சமயங்களில் எங்களுடன் தொடர்பு கொள்வார்கள். குறித்த கேள்விக்கான பதில் நாளை தேவை என்றால், அது இன்று எங்களுக்குக் கிடைக்கும். 

நாங்கள் எப்படியாவது அந்தக் கேள்விகளுக்குப் பதில்களை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். அதன் பிறகு, அது நிதி அமைச்சரிடம் அனுப்பப்படும். 

இதுதான் செயல்முறை. நிதி அமைச்சர் மூலமாக மத்திய வங்கிக்குக் கிடைக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான நேரத்தில் பதில்களை அனுப்புவோம் என்று என்னால் உறுதியளிக்க முடியும். 

இருப்பினும், இந்தச் செயல்முறை உரிய நேரத்தில் நடப்பதில்லை. சில கேள்விகள் மத்திய வங்கிக்கு மட்டும் தொடர்புடையவை அல்ல.  அந்தக் கேள்விகள் மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் பிற நிறுவனங்களுக்கு தொடர்புடையவை. 

நிதி அமைச்சர் அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் பெற்று, ஒரு அறிக்கையைத் தயாரித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு வழங்குவார்.  எங்களுக்கு அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை." என்றார்.