Print this page

மாகாண சபை தேர்தல் நடத்த எதிரணி ஆதரவு தேவையில்லை

November 11, 2025

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்புக் கோர வேண்டிய அவசியம் கிடையாது. அரசாங்கத்திடம் பெரும்பான்மைப் பலமுள்ளது. சட்டதிருத்தமொன்றைக் கொண்டுவந்து மாகாண சபைத் தேர்தலை தாராளமாக நடத்தமுடியும். ஆனால், இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான 02ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘‘2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 20 சதவீதமானவை மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மிகுதி 80 சதவீதமானவை காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை.

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு பற்றி வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு பற்றி குறிப்பிடப்பட்டன. இருப்பினும் ஏதும் செயற்படுத்தப்படவில்லை. ஆகவே இம்முறை வழங்கியுள்ள வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

தனது வரவு செலவுத்திட்ட உரையில் மாகாணசபைத் தேர்தல் பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்திடம் பெரும்பான்மை உள்ளது. சட்டதிருத்தம் ஒன்றை கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தலை தாராளமாக நடத்த முடியும். ஆனால் இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என்பதை நாம் உறுதிபடக் கூறுகின்றோம்’’ என்றார்.