Print this page

பட்ஜெட் நிறைவேற்றம்

December 06, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத திட்டம் 157 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்ட துடன்  எதிராக  ஒரு வாக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில்   157 மேலதிக வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்புக்கு ஆதரவாக ஆளும் கட்சியினர் வாக்களித்த நிலையில்  எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே வாக்களித்தது. ஏனைய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு  -செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்தார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு  14 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் ஆதரவாக 160 பேரும் எதிராக 42 பேரும் வாக்களித்தனர்.

அதனையடுத்து குழுநிலை விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல்  டிசம்பர் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான 17  நாட்கள் நடைபெற்ற நிலையில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார் அதனையடுத்து வாக்கெடுப்பு இடம்பெற்றது.

நாட்டில் கடந்த வாரம் நிலவிய மிக மோசமான  இயற்கை அனர்த்தத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மூன்றாம் வாசிப்பின் போது  வாக்கெடுப்பு கோராமல்  இருப்பதற்கும், அவ்வாறு ஏனைய எதிர்க்கட்சிகளின்  சில வேளை வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் ஏற்கனவே எதிர்க்கட்சி பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அதேபோன்று தமிழரசுக் கட்சியும் வாக்கெடுப்பு கோரும் நிலைப்பாட்டில் இல்லை என தெரிவித்திருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக்  கோரியிருந்தார்.

அதனடிப்படையில் மாலை 7.25  மணியளவில் இலத்திரணியல் முறையில் இடம்பெற்ற வாக்களிப்பில் ஆளும் கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்ததுடன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி மாத்திரம் எதிர்த்து வாக்களித்திருந்தார். அதனடிப்படையில் வரவு செலவு திட்டத்தின் 3ஆவது வாசிப்பு  157மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.