Print this page

ரன்வல விவகாரத்தில் இரு பொலிசாருக்கு சிக்கல்

December 18, 2025

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் வாகன விபத்துச் சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையைச் செய்யத் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் விசாரணையொன்றை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த விசாரணையில், சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கமைய, குறித்த அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் ஊடாக ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.