Print this page

லஞ்ச்ஷீட் பயன்பாடு முழுமையாகத் தடை

December 24, 2025

2026 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் லஞ்ச் ஷீட் (பிளாஸ்டிக் உணவு பொதி தாள்) பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்ய பேதுருதூவு நகர சபை தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பருத்தித்துறை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் பி. தினேஷ் இதனை தெரிவித்தார்.

இந்தத் தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், நகர சபைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் வியாபார அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச் ஷீட்டிற்கு மாற்றாக, உணவுகளை பொதி செய்வதற்காக வாழை இலை, தாமரை இலை, தேக்கு இலை போன்ற இயற்கை பொருட்களையும், அத்துடன் உணவு பொதிக்க அனுமதி பெற்ற அலுமினியம் ஃபோயில் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.