பொதுமக்கள் பயன்படுத்தும் சிறிய வாகனங்களின் விலையை குறைப்பதற்காக அரசு கவனம் செலுத்த வேண்டும் என, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
அவர் அரசிடம், குறைந்த என்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
“பொதுமக்கள் வாங்கும் Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000cc வகை வாகனங்களின் வரியை குறைக்க வேண்டும்.
ஒரு சாதாரண Wagon R வாகனத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் அளவிலான வரி விதிக்கப்படுகிறது. இது ஒரு சிறிய வாகனம்; நடுத்தர வர்க்கத்தினரே இதனை வாங்குகின்றனர். இது நல்ல எரிபொருள் திறன் கொண்ட வாகனமாகும். உண்மையில் இத்தகைய வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும்” என அவர் கூறினார்.
இதற்கிடையில், அண்மையில் நிலவிய பேரிடர் நிலைமை காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் காரணமாக, இறக்குமதி வாகனங்களுக்கான விதிமுறைகளை தளர்த்துமாறு அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பேரிடர் நிலைமையால் மக்களின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு முன்பதிவு செய்தவர்கள், தாங்கள் இறக்குமதி செய்த வாகனங்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மூன்று மாதங்களை கடந்தால் 3% அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே, இந்த பேரிடர் நிலைமையை கருத்தில் கொண்டு, சாத்தியமானால் இந்த 3% அபராதத்தை நீக்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.