Print this page

டக்ளஸ் தேவானந்தா விளக்கமறியலில்

December 28, 2025

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதூஷிடம் இருந்து மீட்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.