Print this page

போலி செய்திகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது

December 29, 2025

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு விமர்சனத்தையும் ஏற்கத் தயாராக இருந்தாலும், திட்டமிட்டு பரப்பப்படும் போலி செய்திகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என ஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், “எந்த விதத்திலும் ஊடக ஒடுக்குமுறை இல்லை. சமூக ஊடகங்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களுக்கு எங்களை விமர்சிக்கவும், எங்கள் பலவீனங்களை சுட்டிக்காட்டவும் முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆனால், சில ஊடக நிறுவனங்களும் சமூக ஊடக குழுக்களும் திட்டமிட்ட வகையில் போலி செய்திகளை பரப்புவதுதான் பிரச்சினையாக உள்ளது” என தெரிவித்தார்.

மேலும், சுகாதாரத் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற மிகவும் உணர்வுபூர்வமான துறைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவது மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். சமீபத்திய அனர்த்த நிலைமைகளில் இருந்து நாடு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கி தேசிய நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் இத்தகைய தகவல்களை உருவாக்குவது வெறும் விமர்சனமாகக் கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நடப்பிலுள்ள சட்ட கட்டமைப்புக்குள் செயல்பட அரசாங்கம் உறுதியாக உள்ளது. போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் எங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறான தவறான பிரசாரங்களை கட்டுப்படுத்தி நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்காகத்தான் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர்” என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.