தமது கட்சியைச் சேர்ந்த எவருக்கும் சொத்து-பொறுப்பு அறிக்கைகள் தொடர்பாக லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், தமது கட்சியைச் சேர்ந்த எவரும் இதுவரை சட்டவிரோதமாக பணம் சம்பாதித்ததில்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறு சம்பாதிக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
தற்போதைய அரசின் ஆறு அமைச்சர்களுக்கு எதிராக, பணம் சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துகள் தொடர்பாக விரிவான விசாரணை ஆரம்பிக்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திக்கு பதிலளிக்கும்போதே டில்வின் சில்வா இவ்வாறு கூறினார்.
அந்த செய்தியில் சுனில் ஹந்துன்னெத்தி, வசந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க, நலிந்த ஜயதிஸ்ஸ, சுனில் வடகல மற்றும் குமார ஜயகொடி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவிவருவதாகவும், அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சொத்து-பொறுப்பு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதில் சந்தேகம் இருப்பின் எவரும் புகார் அளிக்க முடியும் என்றும், அதன்படி ஒரு நபர் புகார் அளித்துள்ளதாகவும், அந்த புகாரின் மேலதிக விவரங்களை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட விசாரணை நிறுவனத்தில் ஆஜராகுமாறு அந்த புகாராளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தவிர, அரசின் ஆறு அமைச்சர்களையும் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்ததாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது எனவும், ஒருவர் புகார் அளித்த பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பு எனவும் டில்வின் சில்வா மேலும் கூறினார்.