தோட்டப் பகுதிகளில் ஆசிரியர் குடியிருப்புகள் அத்தியாவசியமாக தேவையானதாக அடையாளம் காணப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்டத்தை, சம்பந்தப்பட்ட மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்வாழ் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரினி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய, ஊவா, சபரகமுவ, மேல் மாகாணம், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இந்த ஆசிரியர் குடியிருப்புகளை நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாகாணங்களில் தோட்டப் பகுதிகளை மையமாகக் கொண்டு 864 பாடசாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிரதான நகரங்களிலிருந்து தொலைவான தோட்டப் பகுதிகளின் உள் பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்தப் பாடசாலைகளுக்கு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும், இப்பாடசாலைகளில் இரண்டாம் நிலைப் பிரிவுகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, சாதாரண தரம் மற்றும் உயர் தரம் போன்ற தேசிய பரீட்சைகளில், இப்பாடசாலைகளின் மொத்த செயல்திறன் ஏனைய அரசுப் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை காரணமாக, தோட்டப் பகுதிகளில் வாழும் இளம் தலைமுறை பெரும்பாலும் திறனற்ற தொழிலாளர்களாக மட்டுப்படுத்தப்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், எனவே தோட்டப் பகுதிப் பாடசாலைகளின் மனித மற்றும் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்துதல் அத்தியாவசியம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கிணங்க, ஆசிரியர் பற்றாக்குறையை குறைத்து, மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கண்ட மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்காக முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.