Print this page

கல்வி சீர்திருத்த முயற்சியை கைவிடப் போவதில்லை

எவ்வாறு, யாரால் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள தற்போதைய கல்வி முறை குறித்து மகா சங்கத்தினரும் பொதுமக்களும் திருப்தியடையவில்லை என்றும், அது பெற்றோருக்கு பெரும் பொருளாதார சுமையையும் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கல்வியாளர்களால் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த மாற்றங்களை தற்போது அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளதாகவும், அதற்கு எதிராக அடிப்படை அற்ற பொய்யான தகவல்கள் மற்றும் அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிராமப்புற குடும்பங்களைப் பிடித்திருக்கும் வறுமையின் தீயச் சுழலிலிருந்து விடுபடுவதற்கான அடிப்படை வழி கல்வியே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, “வீட்டில் உள்ள ஒரு பிள்ளை கல்வி பெற்றால், முழு குடும்பமும் முன்னேறும்” என்ற பொதுவான கருத்தை நிஜமாக மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார்.

தற்போது ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதோ அல்லது உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகுவதோ கூட ஒரு குடும்பத்துக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையாக மாறியுள்ள நிலையை மாற்றி, உலகின் எந்த நாட்டுடனும் போட்டியிடக்கூடிய தரமான கல்வியை இலங்கை குழந்தைகளுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் என அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த புதிய மாற்றங்கள் மூலம் குழந்தைகள் தங்களுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக கட்டியெழுப்பவும், சர்வதேச தரம் கொண்ட கல்வியைப் பெறவும் தேவையான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.