கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசை தாக்குவதற்காக சில குழுக்களுடன் சேர்ந்து சதி செய்கின்ற எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த விடயம் குறித்து உண்மையாகவே நன்கு சிந்திக்க வேண்டும் என கல்வி அமைச்சராகவும் செயற்படும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கும் போது, அரசால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பிரதமர் பதிலளித்தார்.
“ஒரு பாடத்திட்ட மொட்யூலின் அட்டையில் வானவில் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நீங்கள் பார்த்திருக்கலாம். வெளிப்புற அட்டையில் வானவில்லின் நிறங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பேச்சுக்களை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்? இது ஒரு விமர்சனம் அல்ல. இது எந்த விதத்திலும் பயனுள்ளதாக இல்லை. இது கீழ்த்தரமானது. உண்மையில் இது தீய நோக்கமுடையது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில், இந்த நாட்டின் மக்கள் நிராகரித்த அரசியல் இதுவே,” என அவர் தெரிவித்தார்.
இந்த வகை விமர்சனங்களுக்கு கல்வியுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் அமரசூரிய, அரசை தாக்குவதற்காக சில குழுக்களுடன் இணைந்து செயல்படும் எதிர்க்கட்சியினர், அரசியல் காரணங்களுக்காக இணைந்து செயல்படும் அந்த சக்திகள் மற்றும் அவற்றால் தங்களுக்கே ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நன்கு சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், அரசாங்கம் பயனுள்ள விமர்சனங்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.