உயர்ந்த பண்புகளைக் கொண்ட குடிமக்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசு அதிகாரத்திற்கு வந்த தருணத்திலேயே, முன்னுரிமையுடன் மாற்றம் செய்ய வேண்டிய முக்கிய துறையாக கல்வி அடையாளம் காணப்பட்டிருந்ததாக சிலாபம் கல்வி வலய அதிகாரிகளை சந்தித்த போது அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் போது சில தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழலாம். எனினும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் சரியான தரநிலைகளின் கீழ் புதிய கல்வித் திட்டங்கள் தவறாமல் அமல்படுத்தப்படும் என அவர் வலியுறுத்தினார்.
கல்வி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளை சரிசெய்யும் போதே, மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் செயல்முறை அவர்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டப் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
தொழில்முறை கல்வியை மேம்படுத்துவதற்காக, இம்முறை வரலாற்றிலேயே அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி அமைப்பில் நிலவும் டிஜிட்டல் தொழில்நுட்ப வேறுபாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வளங்களின் பற்றாக்குறைகளை நீக்குவதற்கான திட்டங்களும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆறாம் வகுப்பு கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் நியாயம் வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
கல்வித் துறையில் நடைபெறும் இந்த முக்கியமான மாற்றக் காலத்தை வெற்றிகரமாக்குவதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் மிக முக்கியமானது என பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.