Print this page

எம்பி ஓய்வூதிய ரத்து சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலத்தில் உள்ள பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எம். பிரேமசிறி, நவரத்ன பண்டா, பி. எம். தீபால் குணசேகர மற்றும் சமன்சிறி ஹேரத் ஆகியோர் ஒருமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மற்றொரு மனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகள், இலங்கை அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமெனில், அது பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, பொதுக் கருத்துக்கணிப்பு (ஜனநாயக வாக்கெடுப்பு) மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.