Print this page

ஜனாதிபதி அனுர வழங்கிய 30 தேர்தல் வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றம்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கிய முக்கிய 30 தேர்தல் வாக்குறுதிகளில், 10 வாக்குறுதிகள் கடந்த நவம்பர் மாதம் வரையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் 10 வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்காக, வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘அனுர மீட்டர்’ (Anura Meter) எனும் முன்னேற்ற கண்காணிப்பு கருவியின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் மூலம் இந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பின் கீழ், ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையின் மூலம் வழங்கிய 30 முக்கிய வாக்குறுதிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மீதமுள்ள 10 வாக்குறுதிகளில் 9 வாக்குறுதிகளில் கடந்த நவம்பர் மாதம் வரையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை எனவும், ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளதாகவும் வெரிட்டே ரிசர்ச் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வின் சிறப்பு அம்சமாக, கண்காணிக்கப்பட்ட 30 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகள் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த முழுமையான ஆய்வு ‘திட்வா’ சூறாவளி இலங்கையை தாக்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.