நிட்டம்புவ, பின்னகொல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 61 கி.கி இற்கும் அதிக எடையுடைய ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோணஹேன விசேட அதிரடிப்படை (STF) முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர் தனது முச்சக்கர வண்டியில் 61 கி.கி 838 கிராம் எடையுடைய போதைப்பொருளைக் கடத்திச் சென்ற போதே விசேட அதிரடிப்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் ரூ. 90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டமுச்சக்கர வண்டியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் மூலம், கைது செய்யப்பட்ட நபர் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் “துபாய் வருண்” (Dubai Varun) மற்றும் மொஹமட் சித்திக் (Mohammed Siddiq), அத்துடன் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் “லெனா” (Lena) எனப்படும் திலிந்து சஞ்சீவ போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.