வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, இந்த சுழற்சி தற்போது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதனால் இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
மேற்படி மாகாணங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமானதுமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த அவர், நெல் அறுவடைச் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் நெல் உலர விடும் விவசாயிகள், எதிர்வரும் மழை நாட்களைகருத்தில் கொண்டு தகுந்த திட்டமிடலுடன் செயல்படுவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நிலவும் குளிரான நிலைக்கு காரணமான குறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27ஆம் திகதிவரை சற்று உயர்வடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.