Print this page

இலங்கை மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதில் பெரும் சிக்கல்

தற்போது நடைமுறையில் உள்ள நிலக்கரி டெண்டர் முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, வரும் சில மாதங்களில் இலங்கை கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது என துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பருவமழை ஆரம்பிக்குமுன், அதாவது மார்ச் மாத மத்தியப் பகுதிக்குள் தேவையான நிலக்கரி கையிருப்பை கொள்முதல் செய்து முடிக்க வேண்டியிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கு முன் அந்த இலக்கை எட்டுவது கடினமாகியுள்ளது.

இதற்கான முக்கிய காரணமாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடல் கொந்தளிப்பாக இருப்பதால் நிலக்கரியை துறைமுகங்களில் இறக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மின்உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட தரமற்ற நிலக்கரியால், 300 மெகாவாட் திறன் கொண்டதாக எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி இயந்திரத்திலிருந்து 240 மெகாவாட் அளவிலான மின்சாரமே பெறப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், நொரோச்சோலை மின்நிலைய ஆய்வக சோதனைகளில், மூன்றாவது நிலக்கரி கப்பல் தொகுதியும் தரநிலைக்கு உட்படாதது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் படி தேவைப்பட்ட 5900 kcal/kg வெப்ப மதிப்பிற்கு பதிலாக, 5600 – 5800 kcal/kg மட்டுமே கொண்ட தரமற்ற நிலக்கரி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு தேவையான 38 நிலக்கரி கப்பல்களில், இதுவரை மூன்று கப்பல்கள் மட்டுமே கிடைத்துள்ளதுடன், மேலும் மூன்று கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடைய உள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் சுமார் ரூ.750 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முதல் கப்பலுக்காக அரசு ஏற்கனவே அமெரிக்க டொலர் 2 மில்லியன் அபராதம் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மின்இயந்திர பொறியாளர்கள் தெரிவிப்பதாவது, நிலக்கரியின் வெப்ப சக்தி குறைவாக இருப்பதால் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிக அளவு நிலக்கரியை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, லங்கா கோல் நிறுவனம், வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கப்பலேற்றத்திற்கு முன் மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும், அவசர கொள்முதல்களை மேற்கொள்வதற்கும் கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டின் மின்சார தேவையின் மூன்றில் ஒரு பங்கை வழங்கும் நொரோச்சோலை மின்நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டால், அது முழு தேசிய மின்சார அமைப்பிற்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.