Print this page

நிபா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொடர்பாக இலங்கை மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் ஆசியப் பிராந்தியமெங்கும் பரவக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆசியாவின் பல நாடுகள் இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

அதன்படி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் விமான நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிபா வைரஸ் என்பது வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் மரண விகிதம் 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவக்கூடியதாக இருந்தாலும், அதன் பரவல் மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெறுகிறது.

இலங்கையும் ஆசிய நாடுகளைப் போல நிபா வைரஸ் தொடர்பாக கவனமாக கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து எந்தவித அச்சமும் ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய நிலையில் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. வரலாற்றில் இந்த வைரஸ் ஒருபோதும் பெருந்தொற்றாக பரவியதில்லை. சந்தேகத்திற்கிடமான நபர்களை பரிசோதனை செய்ய தேவையான பரிசோதனை கருவிகள் இலங்கையில் போதுமான அளவில் உள்ளன. இதுவரை நாட்டில் எந்த நிபா நோயாளியும் பதிவாகவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர் விமானத்தில் பயணம் செய்யும் அளவிற்கு உடல்நலம் வாய்ந்திருப்பது மிகவும் அரிது. எனவே நோயாளிகள் நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டுக்குள் வருகை தரும் பயணிகளை பரிசோதனை செய்வது குறித்து அவர் கூறுகையில்,

“ஒரு வைரஸ் மனிதர்களிடையே வேகமாக பரவும் தொற்றுநோயாக மாறும் போது மட்டுமே இத்தகைய பரிசோதனைகள் அவசியமாகும். நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் கடுமையான நோய்நிலைக்குச் செல்வார்கள். அவர்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்ளும் திறன் குறைவு. மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் வாய்ப்பும் மிகக் குறைவு. எனவே இதற்காக தேவையற்ற பயமும், காலமும், பணமும் வீணடிக்க வேண்டியதில்லை” என தெரிவித்தார்.

அதனால் விமான நிலையங்களில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.