Print this page

தரமற்ற நிலக்கரி காரணமாக மின்கட்டணம் 15–20% வரை உயர வாய்ப்பு

தரநிலைக்கு கீழான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, மின்சாரக் கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய நிலை உருவாகலாம் என, பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் கூறியதாவது:

தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதால், அதிலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய மின்சார அளவு குறைவடைகிறது. இது எவருக்கும் புரியும் எளிய விஷயம். இத்தகைய சூழ்நிலை மின்சார உற்பத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நிதி ரீதியான சிக்கல்களையும் உருவாக்குகிறது.

உதாரணமாக, பொதுவாக 10 கிலோ கிராம் நிலக்கரியிலிருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியை பயன்படுத்தினால், மின்சார உற்பத்தி சுமார் 20 சதவீதம் வரை குறைவாக இருக்கும்.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதன் காரணமாக பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இறுதியில், அந்தச் சுமை முழுவதும் பொதுமக்களின் மீதே, குறிப்பாக மின்சார நுகர்வோரின் மீதே சுமத்தப்படுகிறது.

மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிக்காக மின்கட்டணத்தை உயர்த்த கோரி இலங்கை மின்சார சபை (CEB) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்த நிலக்கரி தொடர்பான பிரச்சினையால் ஏற்படும் கூடுதல் இழப்புகளை குறைப்பதற்காக, மின்கட்டணம் மேலும் 15 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.