Print this page

நாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல - டில்வின்

February 25, 2026

ஜேவிபி (JVP) எப்போதும் இந்தியா எதிர்ப்பு கட்சியாக இருந்ததில்லை என்றும், 1980களில் இலங்கைக்கு கட்டாயமாக இந்தியா–இலங்கை ஒப்பந்தத்தை திணித்த அன்றைய ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி மற்றும் ஜே ஆர் ஜெயவர்த்தன அரசுகளின் செயல்பாடுகளுக்கே தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக ஜேவிபி பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை அவர் ஹிந்து பத்திரிகையின் மீரா ஸ்ரீனிவாசனுடன் நடைபெற்ற நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கேள்வி: நீங்கள் இந்தியா செல்ல தீர்மானித்தது ஏன்?

பதில்: நான் செல்லத் தீர்மானிக்கவில்லை. இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) சிறப்பு விருந்தினர் திட்டத்தில் (DVP) பங்கேற்க இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. இது எனது முதல் இந்திய பயணம்.

கேள்வி: அவர்கள் முழு நிகழ்ச்சித் திட்டத்தையும் அமைத்தார்களா? அல்லது நீங்கள் செல்ல வேண்டிய இடங்களைத் தேர்வு செய்தீர்களா?

பதில்: அவர்கள் திட்டத்தை அமைத்தார்கள். ஆனால் எனக்கு ஏதேனும் விருப்பம் உள்ளதா என்று கேட்டார்கள். கேரளம் பல வகையில் இலங்கையைப் போன்றது என்று நினைத்ததால் அங்கு செல்ல விருப்பம் இருப்பதாக தெரிவித்தேன்.

கேள்வி: நீங்கள் அமுல் கூட்டுறவைக் (Amul) காணச் சென்றீர்கள். மில்கோ மற்றும் தேசிய கால்நடை வளர்ச்சி வாரியம் (NLDB) தொடர்பாக அமுலுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேசிய மக்கள் சக்தி அரசு எடுத்த முடிவில் உங்கள் பயணம் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்தியதா?

பதில்: இந்த பயணம் இந்தியாவின் வளர்ச்சியை, குறிப்பாக பல துறைகளில் தொழில்நுட்ப பயன்பாட்டை காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய முக்கிய அமைப்பாக அமுல் விளங்குகிறது. இலங்கையின் பால் தொழில் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை இந்திய அரசுக்கு தெளிவாக தெரிவித்துள்ளோம். ஆனால் அந்தத் துறையை மேம்படுத்த, குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உதவி பெறத் தயாராக உள்ளோம்.

கேள்வி: உங்கள் கட்சி முன்பு இந்தியா எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து, தற்போது இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதாகப் பேசப்படுகின்றதே?

பதில்: நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததில்லை. அப்போதுராஜீவ் காந்தி மற்றும் ஜே ஆர் ஜெயவர்த்தன  தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கையில் அரசுக்கும், அவர்கள் பின்பற்றிய அரசியல் கொள்கைகளுக்கே எதிர்ப்பு தெரிவித்தோம். குறிப்பாக இந்தியா–இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியிலேயே அந்த எதிர்ப்பு இருந்தது. அது நடக்கக் கூடாத ஒன்று என்றே இன்றும் நாங்கள் கருதுகிறோம்.

ஆனால் அது 38 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. இன்று உலகமும் மாறியுள்ளது; இந்தியாவும் மாறியுள்ளது; நாமும் மாறியுள்ளோம். கடந்த காலத்தை எதிர்கால உறவுகளுக்குத் தடையாக மாற்றக் கூடாது. அந்த தர்க்கப்படி சென்றால், பிரிட்டனுடனும் உறவு கொள்ள முடியாது — அவர்கள் எங்களை காலனியாக ஆட்சி செய்தார்கள்; 1815 கிளர்ச்சியை ஒடுக்கினர். ஆனால் நாம் இன்று முன்னேறியுள்ளோம்.

வரலாறு என்பது வரலாறே. அதிலிருந்து நாம் பாடம் கற்றுள்ளோம். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது தவறு என்று டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.