2022 ஆம் ஆண்டு நடைபெற்ற “அரகலய” போராட்டத்தின் போது நாட்டில் உயிர் மற்றும் சொத்துக்களை அழிக்க போராட்டக்காரர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கிய தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சில அமைச்சர்களுக்கு எதிராக எதிர்கால அரசில் சட்டம் அமுல்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், அந்த தண்டனைகளை வழங்குவதற்கு போதுமான ஆதாரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
“2022 மே 09 ஆம் தேதி நாடு முழுவதும் சொத்துக்கள் அழிக்கவும் கொலைச் செயல்கள் நடைபெறவும் வழிகாட்டுதல் வழங்கிய jvp தலைவர்கள் இன்று நாட்டை ஆளுகின்றனர். அவர்கள் போராட்டக்காரர்களை தூண்டிவிட்டதாக அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன,” என சாகர காரியவசம் தெரிவித்தார்.
மேலும், போராட்டக்காரர்கள் அரசியலமைப்பை மீறியது நியாயமானது என தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் எந்த அடிப்படையில் கூறுகின்றனர் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“அவ்வாறு அரசியலமைப்பை மீறி தனி மாநிலம் கோருவது நியாயமானது என புலி ஆதரவாளர்கள் கூறினால் அதற்கு வழங்கப்படும் பதில் என்ன? அதனை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமே நாங்கள் கேட்கிறோம்,” என அவர் கூறினார்.
போராட்டக்காரர்களின் அரசியலமைப்பு மீறலை நியாயப்படுத்தும் தற்போதைய அரசின் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், புலிகள் அமைப்பு அரசியலமைப்பை மீறி தனி நாட்டுக்கு போராடியது நியாயமானதா எனவும் வினவினார்.
நாட்டில் நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை சம்பவம் தொடர்பாக மற்ற சந்தேகநபர்களுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் என சட்டமா அதிபர் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக நினைவூட்டினார்.