Print this page

ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு ஐஸ், கஞ்சா, ஹெரோயின் கடத்தல்

ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு இலங்கைக்கு போதைப் பொருட்கள் காரில் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை ராமநாதபுரம் காரிகூட்டம் பேருந்து நிலையம் அருகே போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரிலிருந்த 219 கிலோ கஞ்சா, 19 கிலோ மெத்தபெட்டமைன், 10 கிலோ ஹெரோயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் காரிலிருந்த மண்டபத்தைச் சேர்ந்த இபுராகிம் பாதுஷா (29), முகைதீன் பயாஸ் (27) ஆகிய இருவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் சாலை மார்க்கமாக மண்டபம் கொண்டு வந்து, கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

வழக்கில் தொடர்புடைய மண்டபத்தைச் சேர்ந்த சேக் ரகுமான் (25) என்பவரை போலீசார் தேடி வருகிறனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.