Print this page

மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கை தேயிலைக்கு அதிகரிக்கும் கேள்வி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள மக்கள் உணவு பொருட்களை சேமித்து வைக்கும் நோக்கில் அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, அந்த நாடுகளிலிருந்து இலங்கை தேயிலைக்கு இந்த நாட்களில் அதிக கேள்வி (demand) உருவாகி வருவதாக இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்கள் ஆரம்பமான முதல் வாரத்தில் இலங்கையின் தேயிலை ஏலத்தில் ஒரு சிறிய பின்னடைவு காணப்பட்டாலும், அதன் பின்னர் நடைபெற்ற ஏலங்களில் தேயிலை விலை மற்றும் கேள்வி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் கடல்சந்தி (Strait of Hormuz) மூடப்பட்டதாலும் அதனைச் சுற்றிய மோதல்களாலும் குவைத், சவுதி அரேபியா மற்றும் ஈரான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய கிழக்கிலுள்ள பிற நாடுகளுக்கு மாற்று கடல் வழிகள் மூலம் தேயிலை ஏற்றுமதி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. துருக்கி மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே தேயிலை அனுப்புதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக இலங்கை தேயிலை சந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தேயிலை வாரிய தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.