எரிபொருள் விலை ரூ.5000 வரை உயர்ந்தாலும்,தேசிய மக்கள் சக்திக்கு தாம் வழங்கும் ஆதரவை எந்த விதத்திலும் திரும்பப் பெறமாட்டேன் என ராஜாங்கனே சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
தாம் மாலிமாவுடன் இணைந்தது, நாட்டில் நிலவிய ஊழல் அரசியலை நிராகரித்ததாலேயே அன்றி, எந்த தனிப்பட்ட நோக்கத்திற்காகவும் அல்ல என அவர் வலியுறுத்தினார்.
தமது சமூக ஊடகக் கணக்கின் மூலம் வெளியிட்ட காணொளியில்,
“எரிபொருள் விலை 5000 ஆக உயர்ந்தாலும் நாங்கள் மாலிமாவுடன் தான் இருப்போம். ஊழல் அரசியல் வெறுத்ததால் தான் மாலிமாவுடன் சேர்ந்தோம். திரும்பிச் செல்ல அல்ல, முழு மனதுடன் ஆதரிக்கத்தான் வந்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் அரசியலில் ஈடுபடுவது ஜனாதிபதி அல்லது அமைச்சர்களுடன் ‘செல்ஃபி’ எடுக்கவோ, தனிப்பட்ட பலன்களைப் பெறவோ அல்ல என்றும், அரசாங்கத்திடமிருந்து ஒரு சொட்டு தண்ணீரையும் எதிர்பார்ப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாலிமாவுக்கு ஆதரவு வழங்கினாலும், அரசு நாட்டை சரியான பாதையில் முன்னேற்றவில்லை என்றால் அதையும் விமர்சிக்கத் தயங்கமாட்டேன் எனவும், ஊழல் குழுக்களுக்கு மீண்டும் இந்த நாட்டை சீரழிக்க இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.