கல் நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றால், அல்லது அதனை மோசடியாகவே கருதவில்லை என்றால், ஜனாதிபதியும் இந்த மோசடியில் தொடர்புடையவர் என்பதே தெளிவாகிறது என இலங்கை பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இவ்வாறு அவர் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையும் முன்னைய நல்லாட்சிக் கால அரசாங்கத்தின் போன்று இருப்பதாகவும், உண்மையான குற்றவாளிகளை மறைத்து மற்றவர்களை குற்றம் சாட்டும் நிலை காணப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
நாட்டின் நிர்வாக ஜனாதிபதி கல் நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் விதத்தில் செயல்படுகிறார் என்பதும், அவரின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்களைப் பார்த்தால் அது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் முன்னதாகவே அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இருந்தவர் என்றும், தற்போது அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் கூட அவரை பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்தாலும், அதை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் தெளிவான திட்டமில்லை எனவும் அவர் விமர்சித்தார். அரிசி பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யத் திட்டமிடப்படுவது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், சுற்றுலா துறை உள்ளிட்ட பல துறைகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூடுதலாக, அதிகரித்து வரும் வரிகள் மூலம் ஏழை மக்கள்மீது சுமை ஏற்றப்படுவது நியாயமல்ல என்றும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.