Print this page

ஆட்சியில் உள்ள சிலர் குறுகிய காலத்தில் பெரிய அளவில் பணம் சம்பாதிப்பு!

தற்போதைய அரசியல் சூழலில் முன்னணி அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மற்றும் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

சில அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரமே இல்லாத நிலையிலும் மிகவும் குறுகிய காலத்தில் பெரும் செல்வத்தை சேர்த்துள்ளனர் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், முன்னர் மாதிவெள மந்திரி இல்லத் தொகுதியில் ‘D10’ இல்லத்தின் அருகில் வசித்த கே.டி. லால் காந்த, அமைச்சர் பதவியை ஏற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குள் மாலம்பே பகுதியில் மூன்று மாடி கொண்ட பெரிய வீடு ஒன்றை நிர்மாணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், அனுராதபுரம் பகுதியில் உள்ள மற்றொரு அமைச்சர் ரூ. 2 கோடி மதிப்பில் வீடும் எரிபொருள் நிரப்பும் நிலையமும் (ஷெட்) வாங்கியதாகவும், தற்போது அதன் மதிப்பு ரூ. 5 முதல் 10 கோடி வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆட்சியில் உள்ள சிலர் மிகக் குறுகிய காலத்தில் பெரிய அளவில் பணத்தை சம்பாதித்து விட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், குளங்கள் சார்ந்த பாதுகாப்புப் பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாகவும் அவர் தகவல்கள் வெளியிட்டார். குளப் பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவதாக கூறி வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, பின்னர் அந்தப் பகுதிகளில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களிடமிருந்து பணம் பெற்றதாக அவர் குற்றம் சாட்டினார்.

பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், இறுதியில் எந்த ஹோட்டல் அல்லது வீடும் அகற்றப்படாமல், இது வெறும் பணம் பெறும் நடவடிக்கையாகவே நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.