நிதி அமைச்சின் வெளி வளங்கள் திணைக்களத்தில் இணைய ஹெக்கர்ஸ் ஊடுருவியதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தொகையை வெளியிடவில்லை. 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரிப் பணம் ஊடுருவல்காரர்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு , தனது வெளி வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல் மூலம் நிகழ்ந்த இணையப் பாதுகாப்பு மீறல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது .காவல்துறையிடம் முறையீட்டையும் செய்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் 2026 ஜனவரியில் செய்யப்பட்ட ஒரு வெளிநாட்டு நாணயப் பணப்பரிவர்த்தனையுடன் தொடர்புடையது. இந்த மீறலைக் கண்டறிந்தவுடன், அமைச்சு ,இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழுவிற்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் உடனடியாகத் தகவல் அளித்தது.
முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு விரிவான விசாரணையை நடத்தும் பொருட்டு, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
ஏற்கனவே ஒரு உள்ளக விசாரணை நடத்தப்பட்டு, பல அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து சட்ட அமுலாக்க நிறுவனங்களுடனும் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கத் தேவையான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை காணாமல் போனது குறித்து விசாரிக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது.
அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, இக்குழுவில் திறைசேரியின் இரண்டு பிரதிச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏ. என். ஹபுகல மற்றும் எஸ். எஸ். முதலிகே ஆகியோர் இதன் இணைத் தலைவர்களாக இருப்பார்கள்.
தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே. டி. ஐ. பிரேமரத்ன, சட்ட விவகாரங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏ. கே. டி. டி. அரந்தர, மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் இ. டி. சிரந்த ஆகியோர் மற்ற உறுப்பினர்களாவர்.
மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்ட மோசடியான பணப்பரிவர்த்தனை அறிவுறுத்தல்களின் அபாயத்தை விசாரிக்கும் பணி இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட நிதி காணாமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.