நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை கண்டறியவும் அத்துடன் அந்த நிதியை மீள் கையகப்படுத்துவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.
திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பில் தரவு மாற்றம் மேற்கொள்ளப்பட்டு அதனைப் பயன்படுத்தியே மேற்படி நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இவ்வாறான சைபர் தாக்குதல்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி ஊடக சந்திப்பில் அது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர்,
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் பிரவேசித்து சைபர் தாக்குதலை மேற்கொண்டு மோசடிக்காரர்கள் முன்னெடுத்துள்ள திருட்டு தொடர்பில் பல்வேறு வழிகளிலும் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய கடன் மறு சீரமைப்பு செயற்பாடுகளில் தொழில்நுட்ப மட்டும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி சைபர் தாக்குதல் திருட்டு தொடர்பில் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய பிரிவினருக்கும் நிதியமைச்சு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
திறைசேரியின் இரண்டு பிரதிச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை மேற்கொண்டு இனம் காணப்பட்டுள்ள அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிதி பரிமாற்றத்தின ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் நிதியை இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நிலையில் மூன்றாம் தரப்பினரால் அது மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேற்படி நிதி வழங்கப்பட வேண்டிய நிறுவனத்துடன் தற்போது அரசாங்கம் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன் அது தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி சைபர் மோசடிக்காரர்கள் நிதியமைச்சின் கடன் முகாமைத்துவ திணைக்கள கணினி கட்டமைப்பில் பிரவேசித்து நிதி மோசடியை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் தெரிய வந்ததையடுத்து அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அந்த அறிவுறுத்தலுக்கு மேலதிகமாக நிதியமைச்சினால் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த வருடத்திலும் இதுபோன்ற மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இனங்காணப்பட்டு அதனுடன் சம்பந்தப்பட்ட நான்கு பேர் சேவையிலி ருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 2026 ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பான நடவடிக்கைகளின் போதான தகவல்களின் அடிப்படையில் அது விடயம் வெளிப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் உள்ளக ரீதியான ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் பிரதிபலனாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் நால்வருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை நிதியமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.