Print this page

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி இன்று (07) வியாழக்கிழமை இலங்கை வருகிறார்.

இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை உள்ளடக்கியதாக அமையவுள்ள இவ்விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வியட்நாம் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையின் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்நாம் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் கலாச்சார ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்னாம் இனத்துவ மற்றும் சமய விவகார அமைச்சுக்கும் இடையில் சமய அபிவிருத்தி, சமய மாணவர் நலனோம்புகை, சமய நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயங்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.