Print this page

கபில சந்திரசேனவின் தொலைபேசியில் உள்ள மர்மம்

கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான விசாரணைகளில், அவரது கைப்பேசியை பரிசோதிக்க முடியாமல் இருப்பது ஒரு பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதவான் பிரசன்ன அமரசேன முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது இந்த தகவல்கள் வெளியாகின.

விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, உயிரிழந்த நபரின் கைப்பேசியில் ‘Face ID’ பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தொலைபேசியில் உள்ள தரவுகளைப் பெற முடியாமல் இருப்பதால், அதை உற்பத்தி செய்த நிறுவனம் அல்லது வேறு தொழில்நுட்ப நிபுணத்துவ அமைப்பிற்கு அனுப்பி உதவி பெற தேவையான உத்தரவை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

மரணமடைந்தவரின் உடலிலிருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் அனுப்ப நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குற்றச்சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கழுத்துப்பட்டை தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதுடன், அதையும் அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அடையாளம் காணப்படாத மருந்துகள் குறித்து மஜிஸ்திரேட் கேட்டபோது, அவை தற்போது மருத்துவ குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பின்னர் அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டீ சில்வா மற்றும் அவரது மனைவியிடமிருந்தும் ஏற்கனவே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைபேசியின் பூட்டை திறந்து விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு Apple நிறுவனத்தின் அமெரிக்காவில் உள்ள தலைமையகத்திற்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சாட்சிய விசாரணைகளை வரும் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.