Print this page

வாகன இறக்குமதி - ஜனாதிபதியின் மூன்று நண்பர்களுக்கு சலுகை!

மே 16ஆம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் வரி விதிக்க அரசு தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் அதாவது 15ஆம் திகதி திடீரென 1782 வாகனங்களுக்கு கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த கடன் கடிதங்கள் ஜனாதிபதியின் கீழ் செயல்படும் “Rebuilding Sri Lanka” திட்டத்தின் உறுப்பினரான கிரிஷான் பலேந்திர, ஜனாதிபதியின் நெருங்கியவர்களாக கருதப்படும் தம்மிக்க பெரேரா மற்றும் இஷார நாணயக்கார ஆகியோரின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பிற்கு முன்பான ஒரு வார காலத்திற்குள் மட்டும் சுமார் 4000 வாகனங்களுக்கு இவ்வாறு கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட குற்றச்செயலாகும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் முழுவதும் நெருங்கியவர்களுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சித்த போதிலும், ஆட்சிக்கு வந்த பிறகும் அதே கொள்கையே தொடரப்படுவதாக ரஹுமான் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, டில்வின் சில்வா நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்பட்டால் உலகம் முழுவதும் உள்ள கட்சி அமைப்புகள் மூலம் உறுப்பினர்கள் டொலர்கள் அனுப்புவார்கள் என்று கூறியிருந்ததாக அவர் நினைவூட்டினார்.

அதேபோல், சுனில் ஹந்துனெத்திக்கு கிடைத்ததாக கூறப்படும் ஒரு மில்லியன் டொலர் தொலைபேசி அழைப்பை பற்றியும் குறிப்பிட்ட அவர், அந்த டொலர்கள் தற்போது எங்கே உள்ளன என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது டொலரின் மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் த்ரீவீல் டாக்ஸி மீட்டர் போல உயர்ந்து கொண்டிருப்பதாகவும், ஒரு வாரத்தில் மட்டும் டொலரின் மதிப்பு சுமார் 120 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

355 ரூபாயாக இருந்த டொலர் தற்போது 385 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்யப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் காரணமாக மத்திய வங்கி டொலர்களை வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

பொருளாதாரம் படிப்படியாக மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய ஆட்சியாளர்களும் பொய்களை கூறிக்கொண்டே நாட்டின் பொருளாதாரத்தை அழித்து வருவதாகவும், இதன் மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் முழு மக்களும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.