நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், தற்போதைய பொருளாதார கொள்கைகள் மூலம் “செழிப்பான நாடு” உருவாக்கப்படுவதற்குப் பதிலாக மக்கள் தொடர்ந்து வறுமைக்குள் தக்கவைக்கப்படுகின்றனர் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
IMF இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட நிதியை வழங்க தீர்மானித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளை மேற்கோள் காட்டிய ஹர்ஷ டி சில்வா, பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்ததற்கான முக்கிய காரணம் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகள் போதிய அளவில் தளர்த்தப்படாததே எனக் குறிப்பிட்டார். இலங்கை அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில் பழைய குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றும், அதற்காக சமகி ஜன பலவேகய முன்வைத்துள்ள “Blueprint” வேலைத்திட்டத்தில் உள்ள மூலோபாயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அரசுக் கடன் மேலாண்மை மற்றும் நிதி ஒழுக்கம் காரணமாக நாட்டில் ஒரு அளவு நிலைத்தன்மை ஏற்பட்டதை ஏற்றுக்கொண்ட அவர், தற்போதைய அரசாங்கம் அந்த நிலைத்தன்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பாராட்டு பெற முடியாது என்றும் கூறினார்.
தற்போது வறுமையில் வாழும் மக்களை அதிலிருந்து மீட்க வேண்டுமெனில் பொருளாதாரம் மிக வேகமாக வளர வேண்டும் என்றும், தற்போதைய திட்டங்களின் மூலம் “செழிப்பான நாடு உருவாக்குகிறோம்” என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் மக்களின் துயரமான வாழ்க்கை நிலை மேலும் நீடிக்கச் செய்யப்படுவதாகவும் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டினார்.