அங்குருவத்தோட்டா - படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 பேர் தற்போது ஹொராணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இல்லத்தில் இருந்த சுமார் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்குருவத்தோட்டா, படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று (03) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் தீயினால் மையம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தீ விபத்து நடந்த நேரத்தில் இல்லத்தில் சுமார் 72 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. தனியாரால் நடத்தப்படும் இந்த இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக அங்கிருந்த ஒரு குழுவினர் தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை (04) நீதித்துறை விசாரணை நடத்தப்பட்ட பின்னர், சடலங்கள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.