Print this page

சுரேஷ் சலே மூலம் கசியும் தகவல்களால் ராஜபக்ஷ அணி கலக்கத்தில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் அணியையும், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக, சுரேஷ் சலே ஒரு அரசியல் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 300 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாகவும் மக்கள்  போராட்ட முன்னணி உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது சுரேஷ் சலே தொடர்பான தகவல்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், ராஜபக்ஷ அணியினர் பதற்றமடைந்து வருவதாகவும், அவரிடமிருந்து தகவல்கள் வெளியாகும் போதெல்லாம் நாமல் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினையாற்றுவதாகவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் அவர் கூறியதாவது:

“கைது செய்யப்பட்டு சில நாட்கள் கடந்த பிறகு, சுரேஷ் சலே தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், வாழ்வது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறுகிறார். இது மிகவும் நகைச்சுவையான நிலைமை என்று நாங்கள் நினைக்கிறோம்.

2022 ஆம் ஆண்டின் மக்கள் போராட்டத்திற்குப் பிறகு எங்களை கைது செய்தார்கள். பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எங்களை சிறையில் அடைத்தார்கள்.

அப்போது ரணில் தலைமையிலான ஆட்சி, அதற்கு ஆதரவளித்த அதிகாரிகள் மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்டோர் எங்களை இருண்ட அறைகளில் அடைத்தனர். சுவாசிக்க முடியாத, காற்றே வராத இடங்களில் வியர்வையில் வாட விட்டனர்.

போதுமான உணவோ, குடிநீரோ வழங்கப்படவில்லை. தூங்க ஒரு பாயோ, துணியோ கூட தரப்படவில்லை. எங்களை அழிக்கத் திட்டமிட்டவர்கள் இன்று பிணை கேட்டு புலம்புகின்றனர்.”

மேலும் அவர் கூறியதாவது:

“2019 ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 300 பேரையும், காயமடைந்த 500 பேரையும் மறக்கச் செய்து, இன்று பிணை பெற முயற்சிக்கின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, தற்கொலை எண்ணம் வருகிறது என்று கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்ஷ அணியையும், கோட்டாபய ராஜபக்ஷவையும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக சுரேஷ் சலே ஒரு அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

எனவே இந்த விசாரணைகள் தொடர வேண்டும். சுரேஷ் சலேயிடம் இருந்து தகவல்கள் வெளிவரத் தொடங்கியவுடன், ராஜபக்ஷ அணியினர் கலங்கத் தொடங்கியுள்ளனர். சலே குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்போது ஏன் ராஜபக்ஷ தரப்பு பதற்றமடைகிறது? அவரிடமிருந்து தகவல்கள் வெளிவரும்போது ஏன் நாமல் ராஜபக்ஷ குரல் கொடுக்கிறார்? இதற்கான தொடர்புகள் படிப்படியாக வெளிச்சத்துக்கு வருகிறது.”