Print this page

சுரேஷ் சாலே கோட்டாபய ராஜபக்சவின் கை பொம்மை!

தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சாலே குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சாலே ஒரு தொழில்முறை இராணுவ அதிகாரியாக அல்லாமல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டளைகளை நிறைவேற்றிய ஒருவராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

சுரேஷ் சாலே மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் கோட்டாபய ராஜபக்சவின் அறிவும் அனுமதியும் உடனேயே நடந்ததாகவும், அவரின் அனுமதியின்றி சாலே எதையும் செய்யவில்லை என்றும் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும், சாலேவை “மூளையின் பின்பகுதி” என்றும், கோட்டாபய ராஜபக்சவை “அதன் தலை” என்றும் குறிப்பிடிய அவர், மற்ற ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் இந்த நடவடிக்கைகள் குறித்து அறிந்திருந்ததாக கூறினார்.

அதேவேளை, சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினருடன் சுரேஷ் சாலே நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் பொன்சேகா குற்றம்சாட்டினார்.

போருக்குப் பின்னரான காலகட்டத்தில் சஹ்ரான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் ராஜபக்ச தரப்பின் ஆதரவுடன் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னை எட்டு மாதங்கள் எந்த குற்றச்சாட்டும் வழக்கும் இன்றி கைது செய்து தடுத்து வைத்து துன்புறுத்துமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியவர்களில் சுரேஷ் சாலேயும் ஒருவர் எனவும் பொன்சேகா நினைவுகூர்ந்தார்.

மேலும், தனது மனைவி மற்றும் மகள்களும் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், விமான நிலையங்களில் கூட அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டதாக கூறப்படும் அந்த அநீதிகளுக்காக, இன்று சுரேஷ் சாலே எதிர்கொண்டு வரும் நிலை “செய்த கர்மத்தின் விளைவு” எனக் குறிப்பிட்ட பொன்சேகா, “இப்போது சாலே போன்றோரின் நேரம் வந்துவிட்டது” என்றும் தெரிவித்தார்.