Print this page

டெங்கு - நிலைமை மிக மோசம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அந்த உயிரிழப்புகளில் 4 சிறுவர்கள் அடங்குவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.

மேலும், கடந்த 6 மாதங்களில் 40,443 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்கள் டெங்கு வேகமாக பரவி வரும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் டாக்டர் பிரஷிலா சமரவீர வலியுறுத்தினார்.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு குழு அறிவித்துள்ளது.