அரசு வாழை மரத்தின் நாரிலிருந்து துணி உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவதற்கு முன், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் ஆடைத் தொழிற்சாலைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய பொருளாதார சிக்கல்களால் இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகள் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
“இந்நேரத்தில் மிகவும் அவசியமானது அந்த தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதே. வாழைநாரிலிருந்து துணி தயாரிப்பது குறித்து சிந்திப்பதற்கு முன், தற்போதுள்ள ஆடைத் தொழில்துறையை நிலைநிறுத்த அரசாங்கம் உடனடி தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
வாழை மரத்தின் நாரைப் பயன்படுத்தி துணி உற்பத்தி செய்யும் திட்டம் குறித்து விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அண்மையில் வெளியிட்ட கருத்தை விமர்சித்தபோதே சஜித் பிரேமதாச இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.