2009-ல் உள்நாட்டு போர் நடந்தபோது விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் நீதிமன்றத்தில் 3 மாதங்களுக்குள் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதம் மற்றும் இதர தளவாடங்களை வாங்க தங்கத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
உள்நாட்டு யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த போது விடுதலைப் புலிகள் சேகரித்து வைத்திருந்த சுமார் 6 ஆயிரம் கிலோ தங்கம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்தத் தங்கம் எங்கே என்ற விவரம் தெரியவில்லை.
விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை 3 மாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்களிடமிருந்து தங்க நகைகள் எதையும் கைப்பற்றவில்லை. புலிகளின் களஞ்சியச் சாலைகளில் இருந்து 150 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.
அதேசமயம், அந்த நகைகளின் உரிமையாளர் விவரம் தொடர்பாக எவ்விதத் தகவல்களும் கிடையாது. முன்னதாக 2014-ல் அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திய 2,015 தமிழர்களுக்கு அவர்களது நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.