Print this page

சஹ்ரானின் 8 சகாக்களுக்கும் விளக்கமறியல்

சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று, அவரது மத விரிவுரைகளில் கலந்துக்​கொண்ட சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை ​செய்து வரும் சந்தேகநபர்கள் 14 பேரில் 8 பேரை ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் ஐ.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவினரால், சந்தேகநபர்கள் இன்றைய தினம் கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இச்சந்தேகநபர்களுள் ஐவர் சஹ்ரானின் மத விரிவுரைகளில் கலந்துக்கொண்டுள்ளதுடன் ஏனைய மூவரும் சஹ்ரானுடன் இணைந்து ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டவர்களென்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று  (24) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எச்.ஐ.எம்.ரிஸ்வி உத்தரவிட்டுள்ளதுடன் நேற்றைய தினமே கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையம் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் ஐ.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.